தமிழகத்தில், வழக்கமாக, சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் இடம் பெறும் தேசிய, மாநிலக் கட்சிகள் தாண்டிய, மக்கள் இயக்கங்களின் போராட்ட நடவடிக்கைகள், அவ்வளவாக ஊடகக் கவனம் பெறுவதில்லை. அவை முக்கிய நிகழ்வுகளாகக் காணப்படுவதில்லை. ஆனால், இம்முறை, திமுக, அஇஅதிமுக கட்சிகளோ, இரண்டாம் மூன்றாம் நிலைக் கட்சிகளான மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவையோ, வழமையான தமிழ் தேசிய கட்சிகளோ வழிநடத்தாத, மக்கள் போராட்டங்கள், முன் எழுந்து வந்தன. நீதிமன்ற, சட்டமன்ற கவனம் பெற்றன. செல்வாக்கு செலுத்தின.

போராட்டங்களில், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், படித்த மற்றும் இதர நடுத்தர மக்கள், சாமானிய மக்கள், தொழிலாளர்கள் போன்ற பல பிரிவினரும் ஈடுபட்டனர். வைகோ, சீமான் வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள், அம்மாவின் தாயுள்ளத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் தேசியம் பேசுபவர்கள், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தேசிய இனங்களுக்கு விரோதியான வன்மையான இந்திய அரசை, ஸ்ரீலங்கா -பாகிஸ்தான் - சீனா அச்சுக்கு எதிராக நிற்குமாறு அழைப்பு விடுக்கிறார்கள். ஜெயலலிதாவும் இந்திய அரசும், ஸ்ரீலங்காவில் சிங்களப் பேரின வாதத்தால் வேட்டையாடப்படும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். இது, புலி ஆட்டை பாதுகாக்கும், முதலாளித்துவமும் கிராமப்புற மேட்டுக் குடியினரும் முறையே தொழிலாளர்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாப்பார்கள் என்ற கருத்திற்கு ஈடானதாகும்.

மன்மோகன் தலைமையிலான அய்முகூ அரசை திரும்பத் திரும்ப நாடாளுமன்றத்தில் காப்பாற்றும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரசின் கே.வி.தங்கபாலு, விஸ்வ இந்து பரிஷத், சுப்பிரமணியசாமி ஆகியோர் மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்ற கருத்தில் உறுதியாய் நின்றார்கள்.

பிருந்தா காரத் சட்டப்படிதான் எதுவும் எனச் சொல்லி, மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டைப் புலப்படுத்தினார். நெஞ்சில் ஈரமுள்ள சட்டமன்றத்தின் கருணை என்றார் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றத் தலைவர் சவுந்தரராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனோ ஜெயலலிதா ஒரு பெண் என்ற விதத்தில் தலையிடுமாறு வேண்டுகின்றார். தமிழர்களைக் காப்போம், மரண தண்டனையே கூடாது என்ற குரல்களும் கூட போராட்ட இயக்கத்தில் ஒலிக்கவே செய்தன.

கருணாநிதியின் கயமை சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் அம்பலப்படுத்தப்பட்டது. 2000ல் மூவர் கருணை மனுவை கருணாநிதி நிராகரித்தார். இப்போதும், நீண்ட காலம் சிறையில் இருந்தவர்கள் என்ற காரணத்தால்தான் தலையிடுகிறாராம்.

அம்மையார் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 72, 161, 257 என்றெல்லாம் காரணம் சொல்லி தலையிட மறுத்தார். முந்தைய நாள் மறுத்ததையே மறுநாள் தீர்மானமாகப் போடும்போது, அதே 72ம், 161ம், 257ம் தடுக்கவில்லை என்பதை, தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 72ல் மரண தண்டனையைக் குறைக்கும் அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு (மத்திய அரசுக்கு) தரப்பட்டுள்ளது. பிரிவு 72 (3) குடியரசுத் தலைவரின் (மத்திய அரசின்) இந்த அதிகாரம், ஆளுனர் (மாநில அரசு) அதிகாரத்தை செலுத்துவதைப் பாதிக்காது என, திட்டவட்டமாகச் சொல்கிறது. பிரிவு 161 ஆளுனருக்கு (மாநில அரசு) சுதந்திரமாக மரண தண்டனை குறைப்பு அதிகாரம் தந்துள்ளது. பிரிவு 257 மத்திய அரசு மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என சில விசயங்களில் வழிகாட்டுதல் தருவது பற்றிக் குறிப்பிடுகிறது. மூவரின் கருணை மனு, 11 ஆண்டுகள் தாமதமானதாலேயே, அது குறித்த நீதிமன்ற தீர்ப்புகளையும் கணக்கில் கொண்டு, சுதந்திரமாக மாநில அரசு பிரிவு 161ன் கீழ் மரண தண்டனையைக் குறைக்குமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க முடியும். இதற்கு எந்த சட்டத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெயலலிதா மக்கள் விருப்பத்திற்கும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப் பளித்து, மூவர் மரண தண்டனை குறைப்பு தீர்மானம் கொண்டு வந்தாரே தவிர, தமது சொந்த விருப்பத்தால் அல்ல என்பதை தமிழகம் பதிவு செய்து கொள்ளும். இதே ஜெயலலிதா நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட போது பொங்கியெழுந்து பேசியதை, 2008ல், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதமாவது பற்றியும், நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது பற்றியும் ஜெயலலிதா கண்டித்து அறிவிப்பு வெளியிட்டதை, தமிழ் தேசியம் பேசுபவர்கள் மறக்கலாமே தவிர, தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை கூடாது, பொதுவாக மரண தண்டனையே கூடாது என்ற குரல்களின் பின்னால் உள்ள உணர்வுகளை மதிக்கலாம். ஆனால், பிரச்சனையின் ஜனநாயக மற்றும் அரசியல் இயல்புகளின் தீவிரத்தை, இந்த வாதங்கள் நீர்த்துப் போக வைக்கும் என்பதையும் காண வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதையோ, அரசியல் ஒடுக்குமுறை ஏவப்பட்டதையோ, அதில் பேரறிவாளன் போன்றோர் பலியானதையோ எப்படி மறக்க முடியும்?

பேரறிவாளன் தடா என்ற ஆள்தூக்கி ஆட்கொல்லி சட்டத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். தடா சட்டம் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பொருந்தாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், அவரது தண்டனைக்கு ஆதாரமாக்கப்பட்டது. இரண்டு ஒன்பது ஓல்ட் பேட்டரிகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது அரசியல் படுகொலை இல்லையா? பதினொரு ஆண்டுகளுக்கு மேல் கருணை மனுவின் மீது உத்தரவிடாமல் இருந்தது, இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருந்து, இப்போது தூக்கு தண்டனை என்பது, ஜனநாயக உரிமைகள் மீறல், மனித உரிமைகள் மீறல் இல்லையா?

சட்டத்தின் ஆட்சி, நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற புனிதமான முதலாளித்துவச் சட்ட வசனங்களை, நாம் ஆட்சியாளர்களை நோக்கித் திருப்ப வேண்டாமா?

அதிசயங்கள் நிறைந்த ஆகஸ்ட் மாதம் முடிந்துவிட்டது. மத்திய அரசு அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லையென கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. பின்னர் ராஜமரியாதையுடன் ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க, அதே அன்னா ஹசாரேக்கு அனுமதி தந்தது.

அந்நிய சதி, நாடாளுமன்றம் வீதிப் போராட்டங்களுக்குப் பணிய வேண்டுமா என்றெல்லாம் பேசிவிட்டு, சிறப்புத் தூதுவர்கள் மூலம் திரும்பவும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியது.

நாடாளுமன்றம் மூலம் உருக்கமாக உண்ணாவிரதத்தைக் கைவிட, வேண்டுகோள் விடுத்தது. கடைசியில் ஜன் லோக்பால் மசோதாவில் உள்ள மூன்று கோரிக்கைகளை ஏற்று மேசையைத் தட்டுவதன் மூலம் தீர்மானம் நிறைவேற்றியது.

மாநிலங்களில் லோக் ஆயுக்தா, நாட்டின் கீழ்மட்டம் வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பால் நடவடிக்கை எல்லைக்குள் கொண்டுவருவது, அனைத்து அரசு அலுவல கங்களிலும் மக்கள் சாசனம் ஒன்றையும் குறைதீர்ப்பு பொறியமைவு ஏற்பாடுகளையும் பார்ப்பவர் கவனத்திற்கு வைப்பது என்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தோடு ஊழல் எதிர்ப்பு துவங்கி

அத்துடன் முடிந்து விடுகிறதா?

அருந்ததிராய், அன்னா ஹசாரே, அந்நிய நிதி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங் களின் பிடியில் இருப்பதாகவும், நாட்டில் நடைபெறும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரும் அயிரம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் பற்றியோ, பசுமை வேட்டை பற்றியோ கவலைப்படாத, ஒடுக்குமுறைகள் அநீதிகள் பற்றிக் கவலைப்படாத, வசதியான மத்தியதர வர்க்கம்தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்போராட்டத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவதாகவும், ஜன்லோக்பால் கொடுங்கரங்களுடன் அனைத்தையும் விழுங்கும் பூதம் எனவும் சீறிப்பாய்கிறார்.

பிரபாத் பட்நாயக், நிறையவே, நாடாளுமன்ற மேன்மை அரசியல் அமைப்புச் சட்டத்துக்குட்பட்ட வழிகள் மற்றும் தீர்வுகள் பற்றியே முதலில் பேசி வந்தார். இப்போது அவதார புருஷனும் ஊமை ஜனங்களும் என தமது விமர்சனத்தைக் குறிப்பானதாக்குகிறார். விநோதமான விதத்தில், மாவோயிஸ்ட்களும் அன்னா ஹசாரேயும் அரசாங்கத்தையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என அருந்ததி ராய் சொல்லும்போது, அவர் பிரபாத் பட்நாயக்குக்குப் பக்கத்தில் செல்கிறார்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரபாத் பட்நாயக்கால், அய்ந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்களிப்பதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் முடிந்து விடும், அதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றம்தான் எல்லாம் என வாதாட முடியவில்லை.

விவகாரம் அன்னா ஹசாரே குழுவின ரோடு மொத்த எதிர்ப்பையும் சுருக்கி காண்பதும் கவலைப்படுவதுமாகும். நாட்டு நடப்புகளில் ஊழல் பிரச்சினைகளில் மத்தியதர வர்க்கத்தினரோ, மற்ற பிரிவினரோ கவலைப்படுவதோ, அவற்றில் அவர்களுக்கே உரிய முறைகளில், தம் எதிர்ப்பை தெரிவிப்பதோ, ஊழல் எதிர்ப்புக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதோ வரவேற்கத்தக்க விசயங்களே தவிர, கவலைப்பட வேண்டிய விசயங்கள் அல்ல.

நாடு முழுவதும் உள்ள ஊழலுக்கெதிரான மக்களின் சீற்றம் நாட்டின் அரசியல் மீது தாக்கம் செலுத்துகிறது. நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய அமைச்சர்கள் சிலர் பதவி விலகுகிறார்கள். கல்மாடி, ராஜா, கனிமொழி சிறையில் உள்ளனர். ஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகுகிறார். நாடாளுமன்ற மேலவை, ஊழல் நீதிபதி சென்னின் பதவி விலக்க தீர்மானத்தை நிறைவேற் றுகிறது. கர்நாடகா முதல்வர் பதவி விலகுகிறார். தப்பிக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த தருணத்தையோ அல்லது மக்களின் இந்த உணர்வையோ இந்தப் பங்களிப்பையோ ஊடகங்களால் உருவாக்க முடியாது. இவை நிச்சயமாய் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட படைப்புக்கள் அல்ல.

முதலாளித்துவ ஊடகங்கள் அன்னா ஹசாரேவுக்கு கிடைக்கும் ஆதரவை மிகைப்படுத்திக் காட்ட முடியும். தாம் விரும்புகிற திசையில் மொத்த விவாதத்தையும் திசை திருப்பவோ, கருத்துக்களை உருவாக்கவோ அவர்களால் முடியும். செய்கிறார்கள். செய்வார்கள்.

அன்னா ஹசாரே குழுவினர் பற்றிய கவலையில், நடைபெறும் ஊழல் எதிர்ப்புக்குப் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் காணத் தவறுவதோ அதனைச் சிறுமைப்படுத்துவதோ, ஜனநாயக லட்சியத்திற்கு உகந்ததல்ல. தோழர் சாரு மஜூம்தார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்ததையும் இகக-மாலெ அசாம் மாணவர் போராட்டம் மற்றும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு கோரிய போராட்டம் ஆகியவற்றுக்கு தனது விமர்சன பூர்வமான ஆதரவு தந்ததையும், நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் காலத்துப் போராட்டங்களோடு மக்கள் எதிர்ப்புணர்வோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இடதுசாரி இயக்கங்கள் ஒதுங்கி நின்ற தவறு, இப்போதும் நடக்கக் கூடாது. அன்னா ஹசாரே குழுவினருக்கு ஜனநாயகம் தொடர்பாக முரண்பட்ட, நிலையான தன்மை இல் லாத நிலைபாடுகள் உள்ளன. அவர்களுக்கு முற்போக்கான சமூக லட்சியங்கள் இல்லை.

அவர்களின் இயக்கத்தில் சில சர்ச்சைக்குரிய ஆதரவாளர்கள் உள்ளனர். இந்தக் காரணங்களால் நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பில் இருந்து நாம் விலகிக் கொள்ள முடியாது.

மாறாக, இவை, ஒரு விடாப்பிடியான ஜனநாயக திசையில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்த, முற்போக்கு முகாம் தனது முழு வலிமையோடு ஈடுபட வேண்டியதை அவசியமாக்குகின்றன.

ஜன்லோக்பால்

அரசாங்க லோக்பாலை விட ஜன்லோக்பால் நிச்சயம் கூடுதல் வெளிப்படைத் தன்மை கொண்டது. ஒப்பீட்டுரீதியான அனைத்தும் தழுவிய தன்மை கொண்டது. அதனாலேயே, அது, ஒரு கவன ஈர்ப்பு விவகாரமாக மாறியதில் வியப்பேதும் இல்லை.

அரசாங்க லோக்பால் மசோதா பிரதமர் நீதிபதிகள் லோக்பாலுக்கு வெளியே என்றது. புகார் சொல்பவரை உனக்கு தண்டனை வாய்ப்புண்டு என மிரட்டியது. அன்னா குழுவினரின் ஜன்லோக்பால் பிரதமர் நீதிபதிகள் போன்றோரையும் உள்ளே கொண்டு வரச் சொன்னது. அதனாலேயே மக்கள் கவனம் ஈர்த்து ஆதரவு பெற்றது. லோக்பால் வரையறைக்குள் ராணுவம் ஊடகங்கள் அரசு உதவி பெறாத தொண்டு நிறுவனங்களும் கொண்டு வரவேண்டுமென முற்போக்கு முகாம் வலியுறுத்த வேண்டும். ஊழல் பற்றிய விவரிப்பு விரிவாக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்த வேண்டும்.

அரிதான தேச செல்வங்களை பெரும் தொழில் நிறுவனங்கள் சூறையாட உதவுதல், அரசு கஜானாவை அவர்களுக்குத் திறந்து விடுதல் நலத்திட்ட நிதிகள் கொள்ளை போன்றவற்றையும் நாம் ஊழல் வரையறைக்குள் கொண்டுவரக் கோர வேண்டும். ஜன் லோக்பாலுக்கு நியமனம் நடைபெறும் விதம் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகத்தன்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் சிறுபான்மையினருக்கு சமூக புறக்கணிப்புக்கும் மறுப்புக்கும் ஆளான பிரிவினருக்கு இடம் இருக்க வேண்டும். ஜன்லோக்பாலுக்கும், சமநிலையைப் பாதிக்காத வகையில் சில எல்லைகள், கட்டுப்பாடுகள் வேண்டும்.

ஊழல் இல்லாத தனியார்மயம் தாராளமயம் உலகமயமா?

இந்தியாவில் ஒரு புதிய பெரிய தலை முறை உலகமய தனியார்மய தாராளமய காலங்களில் வேலைக்குச் சென்றார்கள். இளம் பருவத்தை கடந்தார்கள். இவர்கள் மனங்களில் ஊடகங்கள்தாம் உற்பத்தி செய்த கருத்தொற்றுமையைத் திணித்துள்ளன. தாராளமயம் தனியார்மயம் உலகமயம்தான் வளர்ச்சியைக் கொண்டுவரும். எல்லாவற்றையும் வெளிப் படையாக்கும். ஊழலை ஒழிக்கும். போட்டி நல்லது. அது மட்டுமே முன்னேற்றத்தைக் கொண்டு வரும். அரசு தலையீடு கூடாது. சந்தை நல்லது. உலக வழியில் இந்தியா நடக்க வேண்டும். இவைதான் அந்த கருத்துக்கள்.

இந்த ஆளும் வர்க்க கருத்துக்களைத்தான் ஊடகங்களும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பரப்பினார்கள். இப்போது எழுந்துள்ள பிரம்மாண்டமான ஊழல்கள், இவர்கள் மத்தியில் ஒரு திகைப்பை அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.

ஆகஸ்ட் 25 அன்று கொல்கத்தா அய்அய்டி நிகழ்ச்சியில், ஊழலை தாராளமயம் தனியார்மயத்துடன் இணைப்பது தவறான கருத்து. லஞ்சம் நலநிதி கையாடல்கள்தான் பிரச்சினை. அலைக்கற்றை, நிலம், சுரங்க உரிமைகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை கொண்டுவந்தால் பிரச்சினை முடிந்து விடும் என்றெல்லாம் மன்மோகன் பேசினார். ஊழல் ஊழல் எனப் பேசுவது பொருளாதார சீர்திருத்தங்களை முடக்கிவிடும், அதனால் தேசத்தின் நலனுக்கு ஆபத்து என்ற கருத்தும் பரப்பப்படுகிறது.

இங்கேதான் ஊடகங்கள் ஊழல் பிரச்சினை அரசியல்வாதிகள் அதிகாரிகள் தொடர்பானது என குறுக்கிச் சுருக்குகின்றன. ராஜா கல்மாடி தாண்டி பெரும்தொழில் அதிபர்கள் சிலர் சிறைக்கு செல்ல வேண்டிய நேரத்தில், ஊடகங்கள் அன்னா ஹசாரே எதிர் அய்முகூ அரசாங்கம் லோக்பால் எதிர் ஜன்லோக்பால் என மொத்த விவாதத்தையும் விவகாரத்தையும் சுருக்கி நிறுத்தி திசை திருப்பும் பணியில் இறங்கியுள்ளன.

அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கெஜ்ரிவால், மக்கள், ஜன்லோக்பாலை ஊழல் நோய்க்கு மருந்தாக (தவாய்) காண்கிறார்கள் என்கிறார். வலுவான ஜன்லோக்பால் நிச்சயமாய் தேவைதான். ஆனால் அதனால் மட்டுமே ஊழலை ஒழித்துக் கட்டி விட முடியாது.

மனிதர்கள் நடமாட வேண்டிய அறையின் தரை ஈரமானால் அதனை துணி கொண்டு துடைப்பதும் மின் விசிறியை சுழல விட்டு காய வைப்பதும் நல்லதுதான். ஆனால் அறைக்குள் குழாய் திறந்திருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தால், அறையை துடைப்பதாலும் காயவைப்பதாலும் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

ஊழலின் ஊற்றுக்கண், முதலாளித்துவ பொருளாதாரத்தில், அதனைக் கொழுக்க வைக்கும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளில் அடங்கியுள்ளது. அந்தக் கொள்கைகளைத் திரும்பப்பெற வைப்பதற்கு நாடாளுமன்றம் தாண்டிய மக்கள் போரட்டங்கள் மிகமிக அவசியமானவை. முற்போக்கு முகாம் இந்த அடிப்படை நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வேண்டும்.

இந்தியாவின் சுரங்கங்கள் விரைவாக தோண்டி எடுக்கப்பட்டால்தான் இந்தியாவின் வறுமை நீங்கும் என்கிறார் மன்மோகன். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவிக்கு ஜெய்ராம் ரமேஷ் இடத்தில் ஜெயந்தி நடராஜன் வந்துவிட்டதாகக் காட்டிவிட்டு, புதிய தொழில் துவங்க சுற்றுச்சூழல் அனுமதி தர சுதந்திரமான ஒழுங்கமைவு அமைப்பு உருவாக்கப்படும் என்கிறார். விவசாய நிலங்கள் தொழில் துவங்க கிடைத்தால்தான் வளர்ச்சியும் முன்னேற்றமும் வரும் என்கிறார். பொருளாதார சீர்திருத்தங்கள், அதாவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தொடர வேண்டும் என்கிறார். அரசு தலையீடு கூடாது என்கிறார். இங்கேதான் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் சாரமான பாலமாக ஊழல் மாறி நிற்கிறது.

கழகங்களும் லோக்பாலும்

லோக்பால் எல்லைக்குள் பிரதமரைக் கொண்டு வரலாம் எனக் கருணாநிதி சொன்ன போது, கூடாது கூடாது பிரதமரைக் கொண்டு வந்தால் அந்நிய சக்திகள் தேசத்தையே சீர்குலைக்கும் என்றார் ஜெயலலிதா. இரு கழகங்களும், நாடாளுமன்றம் லோக் ஆயுக்தா பற்றிச் சட்டம் போடுவது, மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றார்கள். மாநில அரசுகள் ஊழல் செய்யும் உரிமைகளில் தலையிடக் கூடாது என்பதில் எப்பேர்ப்பட்ட ஒற்றுமை!

உண்மையில் மாநில உரிமை என்பதுதான் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அக்கறை என்றால், இரண்டு பேரும் மத்திய அரசால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்ல வேண்டியதுதானே!

ஊழல் எதிர்ப்பின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்

காங்கிரசும் பாஜகவும் ஊழல் விசயத்தில் நிழல் சண்டை மட்டுமே போடுவார்கள். ஈயமும் பித்தளையும் ஒன்றைப் பார்த்து மற்றொன்று இளிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டத்தை நீர்த்துப் போக வைக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நிச்சயமாக மக்கள் தங்கள் கண்காணிப்பையும் செயலூக்கத்தையும் தீவிரப்படுத்தியாக வேண்டும்.

அதே நேரம் ஊழல் எதிர்ப்பு என்பது நிச்சயமாக ஒடுக்குமுறை எதிர்ப்போடு இணைக்கப்பட வேண்டும். நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிற உலக முதலாளித்துவம் வழமையான தொழில்கள் தாண்டி கட்டுமானம் ரியல் எஸ்டேட் உயிரி தொழில்கள் தோட்டப் பயிர்கள் சுரங்கத் தொழில்கள் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறது.

பொருளுற்பத்தியில் கூலியுழைப்பை ஈடுபடுத்தி சுரண்டுவதன் மூலமாக மூலதனத் திரட்சி என்ற விசயம் தாண்டி புராதன திரட்சியில் அதாவது காலனிய பாணியில் நிலம் கனிம வளங்கள் போன்ற தேசத்தின் இயற்கை வளங்களை சூறையாடும் வேட்டையைத் துவங்கியுள்ளது. எதிர்ப்பை நசுக்க ஒடுக்குமுறை.

ஆகவேதான் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் தவிர்க்க முடியாமல் விளை நிலங்களை, வன நிலங்களை, கனிம வளங்களை, சுரங்க உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தோடும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தோடும் தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்ள வேண்டும்.

எஸ். குமாரசாமி